பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை

விழுப்புரம், செப். 20: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். மேலும் பேனர் வைப்பதை தடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் அனைத்து சாலைகளிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், மெர்சிரம்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் டிஎஸ்பிக்கள், தாசில்தார்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் விளம்பர பதாகை அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

கூட்டத்தில் ஆட்சியர் சுப்ரமணியன் பேசியதாவது:  விழுப்புரம் மாவட்டத்தில் எந்த அரசியல் கட்சியினரும், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் சாலைகளில் கொடி, தோரணம், விளம்பர பதாகை வைக்கக்கூடாது. அதையும் மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் அகற்றப்படுவதுடன் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு அச்சடிக்கும் அச்சகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், போலீசார் அனைவரும் ஒருங்கிணைந்து விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முன்னரே தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். சாலையோரங்களில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவற்றிலும் கொடி, தோரணங்கள், எவ்வித விளம்பர பதாகைகளும் கட்ட அனுமதிக்கக்கூடாது. விளம்பர பதாகை கட்டுவதற்காக நிலையாக நட்டு வைக்கப்பட்டுள்ள கழிகள், இரும்பு மற்றும் மரத்தினால் ஆன சட்டங்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதனையும் மீறி சட்டத்திற்கு புறம்பாக விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு விளம்பர பதாகைக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இதுதொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை சப்-கலெக்டர்கள், கோட்டாட்சியர்கள், வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடன் அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தால் அதை தடுக்காத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதன் விவரத்தை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: