கொங்கணாபுரம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது

இடைப்பாடி, செப்.15: இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் சனிக்கிழமைதோறும் கூடும் வாரச்சந்தை பிரசித்தம். நேற்றைய சந்தைக்கு சுற்றுப்புற பகுதியில் இருந்து 8500 ஆடுகள், 2000 சேவல் மற்றும் கோழிகள், 91 டன் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். வரும் 18ம் தேதி(புதன்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி, சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. பெருமாள் சுவாமியை வழிபடுவோர் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் கடைபிடிப்பதால், அசைவம் தவிர்ப்பது வழக்கம். அதற்கு முன்பாக 3 நாட்களும் வீடுகளில் அசைவம் சமைத்து விருந்து வைப்பர். இதற்காக வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றதால், விற்பனை சூடுபிடித்தது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தையில் குவிந்தததால் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது.

Advertising
Advertising

10 கிலோ எடை கொண்ட ஆடு ₹4800 முதல் ₹5600க்கும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ₹9500 முதல் ₹11500க்கும் விற்பனையானது. வளர்ப்பு குட்டி ₹950 முதல் ₹1250க்கும், பந்தய சேவல் ஒன்று ₹900 முதல் ₹4000 வரையிலும், சாதாரண சேவல் ₹300 முதல் ₹900 வரையிலும், கோழி ஒன்று ₹120 முதல் ₹550 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பந்தய சேவலை மோத விட்டு விலை நிர்ணயம் செய்வதால், மோதல் அபாயம் ஏற்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சந்தையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சந்தையில் ஏராளமானோர் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வைகுந்தம், சங்ககிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்து சீர்செய்தனர். நேற்றைய சந்தையில் ஆடு, கோழி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் ₹3 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: