ஊட்டி, செப். 11: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பகுதியில் கழிப்பறை இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மஞ்சூர், கொலக்கொம்பை, சேலாஸ், மஞ்சக்கொம்பை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவை போன்ற பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை சந்திப்பாக காட்டேரி பகுதி உள்ளது. இங்கிருந்து குன்னூர் 3 கி.மீ., தூரம் இருந்தாலும், பெரும்பாலான பயணிகள் இங்கிருந்தே சமவெளிப் பகுதிகளுக்கு பஸ்களில் ஏறிச் செல்கின்றனர். அதேபோல், மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் இருந்து வரும் பயணிகளும் இங்கு இறங்கி கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். முக்கிய சாலை சந்திப்பாக உள்ள இப்பகுதியில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை ஒரு பொது கழிப்பறையோ அல்லது இலவச கழிப்பறையே கட்டிதரப்படவில்லை. இதனால், இவ்வழியாக வரும் பயணிகள் அவசர தேவைகளுக்கு கடும் அவதிக்குள்ளாகின்றனர்.