×

நெல்லுக்கு மாற்று பயிராக சிறுதானியங்களை சாகுபடி செய்யலாம் வேளாண்துறை ஆலோசனை

திருவாடானை, செப். 10: நெல்லுக்கு மாற்று பயிராக சிறுதானியங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து திருவாடானை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை, ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை வட்டாரம் விளங்குகிறது. இங்கு 26 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மானாவாரி நெல் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. தற்பொழுது நெல் பயிரை மட்டுமே விதைப்பு செய்யும் விவசாயிகள் அனைவரும் நெல் பயிருக்கு பதிலாக சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.  2019-2020ம் ஆண்டில் திருவாடானை வட்டாரத்திற்கு கேழ்வரகு பயிர் 1300 ஹெக்டேரில் சாகுபடிக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குதிரைவாலி பயிர் 500 ஹெக்டேரில் சாகுபடி இலக்காகவும் வரப் பெற்றுள்ளது. மேற்கூறிய சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்ய தேவையான விதைகள் விவசாயிகளின் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு தானிய பயிர்களுக்கு நெற்பயிரை விட குறைந்த நீர் தேவை இருப்பதால் மாற்றுப் பயிராக சாகுபடி செய்து பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அதே அறிக்கையில் வட்டார வேளாண்மை அலுவலர் வீரகுமார் தெரிவித்திருப்பதாவது, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 40 வயது உள்ள சிறு, குறு விவசாயிகள் பதிவு செய்யலாம். திட்டத்தில் இணைய ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் மேலும் இத் திட்டத்தில் இணைய 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத வருமானம் 15,000 அதிகமாக இருக்கக் கூடாது. இதன் சிறப்பம்சமாக 60 வயதுக்கு பிறகு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் பென்சன் கிடைக்கும். மேலும் 5 ஆண்டுக்கு பிறகு ஐந்தாண்டு திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை எனில் செலுத்திய தொகை வட்டியுடன் திரும்ப வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை