×

புகார் அளித்தும் அலட்சியம் பழுதடைந்த மின்கம்பம் வயர்களை மாற்ற தாமதம்

பரமக்குடி, ஆக.22:  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் வயர்கள், மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றாமல் மின்வாரியம் அலட்சியம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அதிகமான கிராமங்களை கொண்ட பகுதியாகும். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல பல்வேறு கிராமங்களின் வயல் பகுதிகள், காட்டுப்பகுதிகளை கடந்தே மின் வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு வயல் மற்றும் காட்டுப்பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மின் ஊழியர்கள் யாரும் கண்டுகொள்வது கிடையாது. இவைகள் ஏராளமான இடங்களில் கைகளால் தொட்டு விடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதில் ஏராளமான வயர்கள் நீண்ட நாட்களாக பராமரிப்பு செய்யாமல் அறுந்து விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. கிராமப்பகுதிகளில் உள்ள ஏராளமான மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. மின்சார வாரியத்தில் ஆரம்ப காலங்களில் இரும்பினால் ஆன மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தால் சிமென்டால் செய்யப்பட்ட கான்கிரீட் மின்கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மின்கம்பங்கள் பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அதிலுள்ள சிமென்ட் உதிர்ந்து   விரிசலடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

கம்பங்களை பராமரிப்பதோ அல்லது சேதமடைந்தால் உடன் மாற்றுவதற்கான நடவடிக்கைகளையோ மின்சார வாரியம் எடுப்பதில்லை. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பாம்பனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வயர் அறுந்து விழுந்து ஒரு கால்நடை இறந்தது. வண்டியில் வந்த உரிமையாளர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பல இடங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் வயர்கள் குறித்து புகார் தெரிவித்தாலும் மாதக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் செய்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பொதுமக்கள் கூறுகையில், ‘‘நகர பகுதிகளில் மட்டுமே பழைய சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் வைக்கப்படுகிறது. கிராமங்கள், வயல்வெளிகளில் உள்ள மின் கம்பங்கள் கடுமையான சேதமடைந்திருந்தாலும் அவைகளுக்கு பதில் புதிய கம்பங்கள் பொருத்தப்படுவதில்லை. இதுபோன்ற இடங்களில் மின்கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது. காற்று பலமாக வீசும் நேரத்திலும், மழை காலங்களிலும் மின்கம்பம், மின்வயர்கள் உள்ள பகுதிகளில் அச்சத்துடனேயே நடமாட வேண்டிய நிலை உள்ளது. புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. தொடர் உயிர்ப்பலி ஏற்படாமல் மின் சாதனங்களை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை