தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஊட்டி, ஆக. 22: ஊட்டியில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் உள்ள தேனிலவு படகு இல்லம் கடந்த 2006ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த படகு இல்லம் முழுக்க இரும்பு மற்றும் பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டது. இது வெகு காலம் தாக்குப்பிடிக்கவில்லை. தற்போது கூரைகள் அனைத்தும் உடைந்து காணப்பட்டது.  அதேபோல், நடைபாதைகளும் உடைந்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் படகு இல்லம் செல்லும் நடைபாதை மூடப்பட்டது. படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மாற்றுப்பாதையில் கடந்த சில ஆண்டுகளாக அனுப்பப்பட்டனர்.

இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் தொடர்ந்த நிலையில், இதனை சீரமைக்க வேண்டும் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தேனிலவு படகு இல்லம் சீரமைக்கும் பணி துவங்கி நடந்தது. இதில் படகு இல்லம் செல்லும் நடைபாதை நுழைவு வாயில் முதல் அலுலவலகம் வரை சீரமைப்பு பணிகள் நடந்தது. முழுக்க முழுக்க இரும்பு தகடுகளை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், படகு நிறுத்தும் இடங்களில் உள்ள கூரை, அலுவலக கூரைகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பின் தேனிலவு படகு இல்லம் சீரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் இந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: