தடுப்பணையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம்

விக்கிரவாண்டி, ஆக. 22:   மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட  தடுப்பணையின் விரிசல்கள் மற்றும் பழுதடைந்த கதவுகளை சீரமைக்காவிட்டால்  கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என  எம்எல்ஏ மாசிலாமணி அறிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: மயிலம் தொகுதிக்குட்பட்ட ரெட்டணை கிராமத்தில் செல்லும் தொண்டி ஆற்றின் குறுக்கே கடந்த 2014ம் ஆண்டு ரூ. 8 கோடி செலவில்   புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை அடுத்த ஆண்டு வந்த வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் வரும் நீரானது அங்குள்ள கதவுகளின் வழியாக  தண்ணீர் தேங்கி நிற்காமல் போய்விடுகிறது, மேலும் 15க்கும் மேற்பட்ட கிராமத்தின் நீர் ஆதாரமாகவும் உள்ளதாக பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி அணையை பார்வையிட்டேன், மேலும் தடுப்பணை பழுதடைந்தது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

Advertising
Advertising

ஆய்வு செய்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரிசல் விழுந்த தடுப்பணை மற்றும் பழுதடைந்த ஷட்டர் ஆகியவற்றை சரி செய்வதாக உறுதியளித்தனர். ஆனால் ஒரு ஆண்டாகியும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தொலைபேசி மூலமாகவும் நேரிலும் பலமுறை தெரிவித்தும்  எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் மழை காலம் துவங்க உள்ளதால் அணையை நேரில் பார்வையிட்டேன்.  இன்னும் 10 நாட்களுக்குள் பணிகள் நடைபெறவில்லை என்றால் பொதுமக்கள் சார்பாக கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் நடைபெறும் என கூறினார்.   மயிலம் திமுக ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன் ,மணிமாறன், மாவட்ட துணை செயலாளர்கள் மலர்மன்னன், மற்றும் கட்சி நிர்வாகிகள்,  கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: