×

காவிரி குடிநீர் வராததால் குழாயடியில் குடங்களுடன் தவம் கிடக்கும் பெண்கள்

சாயல்குடி, ஆக. 20:  சாயல்குடி பேரூராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் முறையாக வராததால் தெருக்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாயல்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், நூற்றுக்கணக்கான கடைகள், 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களும் உள்ளன. இங்கு காவிரி கூட்டு குடிதண்ணீர் மற்றும் குதிரைமொழி ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் விநியோகம் நடந்து வருகிறது. தற்போது காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் சாயல்குடிக்கு தண்ணீர் வழங்குவதில் அளவு குறைந்துள்ளது.
இதனால் வாரம் இருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தெரு குழாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை குடம் ரூ.5க்கு வாங்கி வருகின்றனர்.
தெருக்குழாயில் எப்போதாவது வரும் தண்ணீரையும், சிலர் விதிமுறைகளை மீறி இணைப்பு வழங்கியுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்பட்டு வருவதால், அத்தண்ணீரும் முழுமையாக வந்து சேருவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தெரு, அண்ணாநகர், துரைச்சாமிபுரம், இருவேலி, பத்திரகாளியம்மன் தெரு, அரண்மணை தெரு, சதுரயுக வள்ளி அம்மன் தெரு, மூக்கையூர் சாலை போன்றவற்றில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எப்போதாவது வரும் தண்ணீரை பிடிக்க குழாயடியில், காலிகுடங்களுடன் காத்து கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. சில இடங்களில் குழாயிலிருந்து கசியும் நீரை சுகாதாரமற்று இருந்தும் கூட, வேறு வழியின்றி பிடித்து வருவதாக பெண்கள் கூறுகின்றனர். எனவே காவிரி கூட்டுகுடிநீரை தினந்தோறும் அனைத்து வார்டுகளுக்கும் வழங்க வேண்டும், குதிரைமொழி குடிநீர் திட்டம் உள்ளிட்ட உள்ளூர் குடிநீர் ஆதாரங்களை மராமத்து செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சீரான குடிநீர் வழங்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை