நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் 315 மனுக்கள் குவிந்தன

நாகை, ஆக.20:நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 33 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 282 மனுக்கள் என மொத்தம் 315 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க ஆணைகளையும், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியிலிருக்கும் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கப்பட்டது.

கீழ்வேளூர் அருகே தமிழ் முடுக்கு தெருவை சேர்ந்த ஜியாவுதீன் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தபோது உயிரிழந்தமைக்காக, அவரது வாரிசுதாரர் நபிஸாபீவிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வந்த இழப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 793க்கான காசோலையை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார். டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: