×

கற்கள் கொட்டப்பட்டும் சாலை பணிகள் நடக்காமல் இழுத்தடிப்பு

ராமநாதபுரம், ஆக.14:   ராமநாதபுரம் அருகே காராந்தல் ஊராட்சி அரியாங்கோட்டை காவனூர் சாலை முதல் தொருவளூர் வரை 6.350 கி.மீ.  தூரம் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர் பணிகள் முடிவடைந்து ரூ.3 கோடியே 45.150 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணிகள் தொடங்கி கடந்த 25.3.2018க்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும், பணிகள் முடிவந்த பின் சாலை பராமரிப்பிற்காக 5 வருடத்திற்கு பராமரிப்பு தொகையாக ரூ24.860 லட்சம் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக சரளை கற்கள் போட்டு செம்மண் போடப்பட்டுள்ளது. தொடா்ந்து ஆமை வேகத்தில் சாலை அமைக்கும் பணிகள்  நடைபெற்று வந்த நிலையில், கடந்த 6 மாதமாக பணிகள் நடக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். சாலையில் பரப்பு வருவதற்காக சரளை கற்களை குவித்து வைத்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும் கற்களை போட்டு வைத்துள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியாக வருபவர்கள் கற்குவியலில் மோதி விபத்து ஏற்படுவதாகவும், சிதறி ரோட்டில் கிடக்கும் கற்களால் பெண்கள், குழந்தைகள் அவ்வழியாக செல்லும் போது காலை பதம்பார்க்கிறது.

மந்த நிலையில் நடக்கும் சாலை பணிகளை பற்றி ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கூறினாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஆடி மாதம் அனைத்து கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடக்கிறது. காரேந்தல் கிராமத்தில் இன்று முளைப்பாரி ஊர்வலம் உள்ளது. இன்னும் சில நாட்களில் அருகில் உள்ள கோயிலில் திருவிழா நடக்க உள்ளது. சாலை போடாத நிலையில் மக்கள் அவதிப்படுவதை பற்றி அரசு கவலை படுவதில்லை. மேலும் காலதாமதமாக சாலை போடுவதால் சாலையின் உயரம் குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் நீண்டநாட்கள் சாலை தாங்காது. இன்னும் விரைவில் பருவ மழை துவங்க உள்ள நிலையில் தரமில்லாமல் போடப்படும் சாலையில் குண்டும் குழியுமாக மாறி விபத்து ஏற்படும் என அச்சம் உள்ளது. இதுகுறித்து ஊர்தலைவர் காளீஸ்வரன் கூறுகையில்,  மக்கள் இந்த சாலையில் எப்படி நடந்து செல்வார்கள் இன்னும் சில நாட்களில் கோயில் திருவிழா நடக்க உள்ளது. இரவில் பைக்கில் வருபவர்கள் கொட்டிக் கிடக்கும் கல்மேட்டில் மோதி விழுகின்றனர். கலெக்டர் உடன் சாலையை போட நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

கலெக்டர் நடவடிக்கை

இதுகுறித்து கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது, ‘‘ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்தில் சாலை பணிகள் முடிக்க வேண்டும். காவனூர் அரியாங்கோட்டை சாலை பணிகள் இன்னும் முடிக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தகாரரிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தரமில்லாத வகையில் சாலை அமைத்தால் காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை