சமையல் போட்டியில் இட்லி,அவல் சோறு சமைத்து அசத்திய சத்துணவு பணியாளர்கள்

ராமநாதபுரம், ஆக.14:  ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கான சமையல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 11 ஊராட்சிகள் மற்றும் 3 நகராட்சிகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது சமையல் திறனை வெளிப்படுத்தும் வகையில் இயற்கை உணவுகளை சமைத்து பார்வைக்கு வைத்திருந்தனர். எண்ணெய் இல்லா உணவு, அடுப்பங்கரை இல்லா உணவு, ஆரோக்கிய இயற்கை உணவு, குழந்தைகள் வளர்ச்சிக்கான உணவு உள்பட 7 வகை உணவுகள் தயார் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர். வைரவன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சமையலர் வஜிதாபானு குழுவினர்  அடுப்பில்லாமலே இயற்கை சாம்பார், புடலங்காய், பீர்க்கங்காய் கூட்டு, அவல் சோறு, ரசம், கேழ்வரகு பாயாசம், கேரட் அவல் சேர்த்து இட்லி, சப்பாத்தி மற்றும் பீர்க்கங்காய் பசும்பொன் அவல் சோறு ஆகியவற்றை தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

போகலூர் பகுதியிலிருந்து போட்டியில் பங்கேற்றவர்கள், பனைமரத்தை சார்ந்தே பல வகை உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. திருப்புல்லாணி பகுதியில் குதிரைவாலி இட்லியும், மண்டபம் பகுதியில் பாசிப்பயறு சாதம், ஆவாரம்பூ கூட்டும் வைக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் நகராட்சி பள்ளி சமையலர் சார்பில் கேழ்வரகு குலோப்ஜாம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. நவதானிய உணவுகள் மற்றும் கிராமம் சார்ந்த தாவர உணவுகள் போட்டிகளில் அதிகம் இடம் பெற்றிருந்தன. போட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை கலெக்டர் வீரராக ராவ், சுவைத்துப் பார்த்து பாராட்டினார். குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே இப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் அமைப்பாளர், உதவியாளர் என 3 பேர் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் சுதந்திர தின கொடியேற்று விழாவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராமபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED உச்சிநத்தம் கிராமத்தில் மாணவர்கள்...