×

அரசு உத்தரவு வராததால் லேப்டாப்களை பாதுகாக்க முடியாமல் திருட்டு அச்சத்தில் தலைமை ஆசிரியர்கள்

பரமக்குடி, ஆக.14:  பரமக்குடியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதற்காக 5 மாதங்களுக்கு முன் வழங்கப்பட்ட லேப்டாப்களை பாதுகாத்து வரும் தலைமை ஆசிரியர்கள், திருட்டு அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்2 படிக்கும் மாணவ,மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. 2018-19 மற்றும் 2019-20ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கான லேப்டாப் 5 மாதங்களுக்கு முன் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு லேப்டாப் வழங்கும்போது பொறுப்பேற்று கொள்ளும் உறுதிமொழி கடிதம் பெறப்படுகிறது. இதில் லேப்டாப் சேதமடைந்தாலோ, திருடுபோனாலோ தலைமையாசிரியர் பெறுப்பேற்க வேண்டும் என, எழுதி வாங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வினியோகம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முதல்வர் தொடங்கி வைப்பதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இந்த தகவல் தெரிந்தவுடன் மேலிட உத்தரவுபடி உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்புகளை பள்ளி நிர்வாகம் உடனடியாக திருப்ப பெற்றுகொண்டது.

பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் அப்போது வந்து பெற்றுக்கொள்ளலாம் என மாணவர்களிடம் சொல்லி அனுப்பி விட்டனர். ஆனால் இதுவரையில் இலவச லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. மீண்டும் அரசு தரப்பிலிருந்து தகவல் வந்தால் மட்டுமே வினியோகம் செய்யவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. பரமக்குடியில் புதிதாக பதவியேற்றுள்ள எம்.எல்.ஏ. லேப்டாப்களை பள்ளி மாணவர்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். கொடுக்காமல் உள்ள லேப்டாப்கள் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதுமான பாதுகாப்பு இல்லாத நிலையில், லேப்டாப்களை பாதுகாக்க வேண்டிய தலைமையாசிரியர்கள் திருட்டு பயத்தில் கதிகலங்கியுள்ளனர்.

இதுகுறித்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 500 முதல் 100 லேப்டாப் வரை வழங்கப்பட்டுள்ளது. இது திருடுபோனால் தலைமையாசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் சிக்கல் தொடர்கிறது. இதனால் பல தலைமையாசிரியர்கள் இரவு காவலர்களுடன் சேர்ந்து இரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை மாணவர்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை