முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்திற்கு அச்சுறுத்தல் தனியார் கல்லூரி பஸ் டிரைவரிடம் விசாரணை

மேச்சேரி, ஆக.14: மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். இதனையொட்டி, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக தமிழக முதல்வர் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் வரும் வழிநெடுகிலும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, வெள்ளாரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கல்லூரி பஸ் ஒன்று, மேச்சேரி அருகே காமனேரி பஸ் ஸ்டாப் பகுதியில் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றது.இதுகுறித்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டு 5வது மைல் பகுதியில் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதில், மாணவிகள் இருந்ததால் அவர்களை கல்லூரியில் இறக்கிய விட்டு பஸ்சை கொண்டுவருமாறு தலைமை காவலர் கோவிந்தன் அறிவுறுத்தினார். இதையடுத்து, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் பெருமாளிடம்(29) போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: