மாற்றத்துக்கான அறிவியல் மாநில மாநாடு இன்று நிறைவு

திருப்பூர், ஆக.11:தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாடு ‘மாற்றத்துக்கான அறிவியல்’ என்ற கொள்கை முழக்கத்துடன் திருப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.  பொது மாநாட்டுக்கு வரவேற்புக்குழுத் தலைவர் யுனிவர்சல் ராஜகோபாலன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செயலாளர் ஈசுவரன் வரவேற்றார். முன்னதாக சிறுபூலுவபட்டி வேல் நர்சரி பள்ளி அருகில் இருந்து அறிவியலுக்கான பேரணி தொடங்கியது. இப்பேரணியை மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். அங்கிருந்து மாநாடு நடைபெறும் ஸ்ரீ அம்மன் கலையரங்கத்தில் இப்பேரணி நிறைவடைந்தது.  இதையடுத்து வெங்கடேஸ்வரன் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கு எதிரான சூழ்நிலை நிலவுவது மற்றும் போலி அறிவியலைப் பரப்புவது ஆகிய மூன்றும் மிகப்பெரும் சவாலாக உள்ளன. இந்த சூழ்நிலையில் மாற்றத்துக்கான அறிவியல் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாநாட்டில் இந்த அடிப்படை விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்றார்.

 சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு 20வது மாநில மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசுகையில், ‘‘பட்டப்படிப்பு படித்தவர்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்புகள் படைப்பார்கள் என்பதில்லை, படிக்காதவர்கள் கூட ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர். கோவை ஜி.டி.நாயுடு ஆராய்ச்சி செய்து பல கண்டுபிடிப்புகளைப் படைத்துள்ளார். இன்றைய சூழலில் நிலம், காற்று மாசுபட்டுள்ளது. பருவமழை கூட காலம் தவறிப் பெய்கிறது. இதில் மாற்றத்துக்கான வழியைக் கண்டறிய வேண்டும்,’’என்றார்.  சுற்றுச்சூழல் ஆர்வலர் கோவை சதாசிவம் உலகம் எப்போது அழியும் எனும் தலைப்பில் கருத்துரை ஆற்றினார். இம்மாநாட்டில் விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.  இன்றுடன் இம்மாநாடு நிறைவு பெறுகிறது.

Related Stories: