ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு அரசு பள்ளி கேட் மூடப்பட்டதால் மாணவர்கள் தவிப்பு

ரிஷிவந்தியம், ஜூலை 24: அரியலூர் அரசு மேல்

நிலைப் பள்ளி கேட் மூடப்பட்டதால் மாணவர்கள், ஆசிரியர்கள் தவித்தனர். விழுப்புரம்  மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 925 மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 27 ஆசிரியர்கள் பணியில்  உள்ளனர். 11, 12ம் வகுப்புகளில் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் பயின்று  வருகின்றனர்.நேற்று காலை 9 மணியளவில் பள்ளியின் கேட் மூடப்பட்டதால்  மாணவ, மாணவிகள் உள்ளே செல்லமுடியவில்லை. அவர்கள் வாயிலை முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு உதவி ஆய்வாளர் பிரபாகரன்  சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலைமையாசிரியர்  நெடுஞ்செழியன் கூறியதாவது: விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  முனுசாமி பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதால் காலை  8.30 மணிக்கு 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த  வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
Advertising
Advertising

அதன்படி அரியலூர் அரசு மேல்நிலைப்  பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நூற்றுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் கால தாமதமாக வந்ததால் முன்பக்க கதவு அடைக்கப்பட்டது  என்றார்.  இதையடுத்து, இனிமேல் காலதாமதமாக வரவேண்டாம் என அறிவுறுத்தி  மாணவர்களை பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தனர்.  சிறப்பு வகுப்புக்கு வராத மாணவர்களை எச்சரிப்பதற்காக கேட் மூடப்பட்டது. இதனால் வழக்கமாக பள்ளி துவங்கும் நேரத்திற்கு (காலை 9மணி) முன்பு வந்த சில ஆசிரியர்களும் பள்ளிக்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: