மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிதாக பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம், ஜூலை 18:  பள்ளிக் கல்வித்துறை இந்தாண்டிற்கான பாடத்திட்டத்தில் பாடங்களை மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்றுக்கொடுக்க தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் அனைத்துப்பாட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பாக தொடக்க நிலையில் 2,3,4 மற்றும் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி குழந்தைகளுக்கு எளிமையான வகையில் புரியும்படி கற்றுக்கொடுப்பது பற்றிய ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்.

புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட விரைவுத் தகவல் குறியீடு, காணொளி காட்சிகள் மற்றும் அசைவூட்டும் பாடக்கருத்துக்கள் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திடும் முறைகள் வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களின் ஆசிரியர் மற்றும் பயிற்றுநர்கள் என மொத்தம் 128 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் உலகராஜ், ரமேஷ்குமார், செந்தில்குமார், ஆறுமுகம், பாண்டியராசு, கிளமெண்ட், உலக நாதன், நிர்மலா ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியை தொடர்ந்து வரும் 23ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பணியிடை பயிற்சிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்பட உள்ளன என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED தமுமுக குற்றச்சாட்டு அதிக மகசூல்...