குறிஞ்சிப்பாடியில் பட்டா கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்

நெய்வேலி, ஜூலை 18: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் புளியந்தோப்பு இடும்பன் கோயில் தெருவில் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இவர்கள் பட்டா கேட்டு பல வருடங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து வந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், இடும்பன் கோயில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பட்டா கேட்டு நேற்று திடீரென குறிஞ்சிப்பாடி-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.  இதை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் உதயகுமார், இடும்பன் கோயில் இடத்தை பார்வையிட்டு தற்காலிகமாக மேல்கூரைகளை மாற்றி அமைத்துக்கொள்ளவும், குடிநீர் பைப் லைன் அமைக்க பேரூராட்சி அலுவலரிடம் பரிந்துரை செய்வதாகவும் கூறினார். மேலும், கடலூர் சார் ஆட்சியரிடம் பேசி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தாசில்தார் உறுதி அளித்தார். மறியல் காரணமாக குறிஞ்சிப்பாடி-விருத்தாசலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: