காரணாம்பாளையம் தடுப்பணையில் தேக்கி வைப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

கொடுமுடி, ஜூலை 16: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டும் காரணாம்பாளையம் தடுப்பணையில் நீரை தேக்கி வைப்பதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள் வறண்டு போகும் அபாயம் உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள காரணாம்பாளையத்தில் காவிரி ஆற்றின் மத்தியில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து கரூர் மாவட்டம் புகளூர் வரை 21 கி.மீ. தூரத்திற்கு புகளூரான் கால்வாய் மைக்கப்பட்டுள்ளது.இதேபோல, இந்த தடுப்பணையில் இருந்து  நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ராஜவாய்க்கால் ஒன்றும் உள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இருக்கும் காலங்களில் காரணாம்பாளையம் தடுப்பணையில் இருந்து  எடுக்கப்படும் தண்ணீர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி,   மாவட்டத்தை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆயிரம் கனஅடி நீர் மட்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் கனஅடிநீரும் வரும் வழியில் பாதியாக குறைந்து காரணாம்பாளையம் அணைக்கட்டுக்கு வந்து சேர்கிறது. இப்படி வந்து சேர்ந்த நீரையும் கொடுமுடிக்கு வடக்கே சில கி.மீ. தொலைவில் உள்ள காரணாம்பாளையம் அணைக்கட்டில் தேக்கி வைத்துக் கொண்டு அதனை புகளூரான் மற்றும் ராஜவாய்க்கால்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விட்டுள்ளனர்.

Advertising
Advertising

இதனால் அந்த அணைக்கட்டைத்தாண்டி காவிரி நீர் கொடுமுடி பகுதியை நோக்கி வரவே இல்லை. ஆற்றில் வந்த  நீர் மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க பயன்படாமலும் மேற்கொண்டு பயணிக்க முடியாமலும் தடுப்பணைக்குள்ளேயே தடுக்கப்படுகிறது.

இதனால், காரணாம்பாளையம் தடுப்பணைக்கு கீழே காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலூர், கொடுமுடி, பகுதிகளுக்கு குடிநீர் தரும் கூட்டு குடிநீர் திட்ட கிணறுகள்  நீர் இல்லாமல் வறண்டு போக துவங்கி உள்ளன. இதனால்,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, சென்னசமுத்திரம், சிவகிரி, கொல்லங்கோயில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில்  வசித்துவரும்  10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலுக்கு  தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கும், பழனிக்கு  தீர்த்தம் கொண்டு செல்வதற்காக வரும் பக்தர்களுக்கும், கொடுமுடியை சுற்றியுள்ள  ஊர்களில்  கோயில் திருவிழாவுக்காக தீர்த்தம் கொண்டு செல்ல வரும் மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: