இலவச லேப்டாப் வழங்க கோரி உடுமலையில் மாணவர்கள் சாலை மறியல்

உடுமலை,ஜூலை16:இலவச லேப்டாப் வழங்க கோரி உடுமலையில் 3வது நாளாக மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த 2016-17, 2017-18ம் கல்வியாண்டுகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. அவர்கள் பள்ளி படிப்பை முடித்து தற்போது கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2018-19ம் கல்வியாண்டில் பிளஸ் 1 படித்தவர்களுக்கு தற்போது இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே லேப்டாப் கிடைக்காதவர்கள் தங்களுக்கு வழங்கிவிட்டு, தற்போதைய மாணவர்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த இரு தினங்களாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் கலெக்டர் பழனிசாமி ஆகியோரை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையிட்டனர். இந்நிலையில், 3-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.உடுமலை தளி ரோடு பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 75 பேர், அரசு ஆண்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் 35 பேர் நேற்று பெண்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாணவர்கள் மட்டும் ஆண்கள் பள்ளிக்கு சென்று அங்கும் போராட்டம் நடத்தினர்.

இதேபோல், குறிச்சிக்கோட்டை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 80 பேர், மூணாறு சாலையில் சின்னகுமாரபாளையம் பிரிவில் பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி போலீசார் சென்று சமாதானம் செய்தனர்.மேலும், உடுமலை ராஜேந்திரா சாலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் பேச்சு நடத்தினார். 15 நாளில் லேப்டாப் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து, 45 நிமிடம் கழித்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.உடுமலையில் மாணவர்கள் தொடர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: