×

கலெக்டரிடம் கொடுக்கும் மனுவை வழிமறித்து பறிக்கும் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

ராமநாதபுரம், ஜூலை 16:  ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு துவங்கும் குறைதீர் கூட்டத்திற்கு அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். மக்களின் எண்ணிக்கை அளவில் குறைதீர் கூட்டம் தொடர்ந்து  நடைபெறும். தொலை தூரத்திலிருந்து வந்து காலை முதல் மனு அளிக்க காத்திருப்பதால் கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டு உணவும் வழங்கப்படுகிறது. நேற்று காலை கூட்டம் துவங்கிய நிலையில் கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. காலை முதலே ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் பகல் 12 மணியளவில் கலெக்டரிடம் மனு அளிக்க வரிசையில் காத்திருந்தவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் மனுக்களை வாங்கி விட்டு உணவு பொட்டலங்களை வழங்கினர். இதனால் கலெக்டரிடம் தங்களது குறைகளை கூற வந்தவர்கள், ஏமாற்றத்துடன் அதிகாரிகளிடத்தில் கொடுத்தால் நடக்குமோ, நடக்காதோ என்ற குழப்பத்திலேயே மனுவை கொடுத்தனர்.
 
இதுகுறித்து திருவாடானையை சேர்ந்த ஜெயந்தி கூறுகையில், எனது மகளின் படிப்பிற்காக கல்வி உதவித்தொகை கேட்டு மனு அளிக்க வந்தேன். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன் இதேபோல மனு அளித்தேன். எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே மீண்டும்  மனுவுடன் கலெக்டரை நேரில் சந்தித்து குறையை சொல்ல நினைத்தேன். காலை 8 மணி முதல் காத்திருக்கிறேன். அதிகாரிகள் வந்து மனுவை எங்களிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று பெற்று கொண்டார்கள். இன்றாவது முடிவு கிடைக்கும் என வந்தேன். நடக்க வில்லை என புலம்பியபடி சென்றார்.
முதுகுளத்தூர் முதியவர் மாணிக்கம் கூறுகையில், கலெக்டரை நேரில் சந்தித்து மனுவை அளித்து குறைகளை விளக்கி கூறினால், பிரச்னையின் முக்கியத்துவம் அடிப்படையில் துறை அதிகாரிகளை அழைத்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார். கலெக்டரை சந்திக்க விடாத நிலையில் தவறு செய்யும் அதிகாரிகளை பற்றி யாரிடம் சொல்வது. இப்படி மனுக்களை வாங்குவது கடந்த சில வாரங்களாக நடக்கிறது. இதுவரை 3 மணிக்கு மேல் மனுக்களை வாங்கினார்கள். தற்போது 12 மணிக்கே மனுக்களை வாங்கி  செல்கின்றனர். இது கலெக்டருக்கு தெரிந்துதான் அதிகாரிகள் செய்கிறார்களா என தெரியவில்லை என்றார்.

குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் குறைகளை கூறினால் நடவடிக்கை உடன் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் கலெக்டர் அலுவகம் வருகின்றனர். அருகில் உள்ள எந்த ஊரிலிருந்து வருவது என்றாலும் ஒரு மணி நேரமாவது ஆகும். திருவாடானை, கடலாடி, முதுகுளத்தூர் பகுதியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டால் தான் 11 மணிக்காவது வந்து சேர முடியும். கிராமங்களில் ஊராட்சி அலுவலர்கள் செயல்பாடு, தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல் தாமதம், பயிர்காப்பீடு முறைகேடு என அதிகாரிகளை பற்றிய குறைகளை கலெக்டரிடம் நேரில் கூற வேண்டும் என வருபவர்கள் கடந்த சில வாரங்களாக ஏமாற்றத்துடன் செல்வது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை