ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விழுப்புரம், ஜூலை 16:  விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 290 பேர் கைது செய்யப்பட்டனர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை ஒட்டியுள்ள 5 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விளைநிலங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை ரத்து செய்யக்கோரியும் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

 மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு கலந்துகொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர்கள் சவுரிராஜன், ராமசாமி, பொருளாளர் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோஷம் எழுப்பியபடி ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்பட 290 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தை துவக்கி வைத்து சென்றதால் நல்லக்கண்ணு தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Advertising
Advertising

Related Stories: