வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு சீல்

விழுப்புரம், ஜூலை 12: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மக்களவை தேர்தலின்போது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் வாக்கு பதிவுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து கொண்டு செல்வதற்கு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி குடோன் மற்றும் விழுப்புரம் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு ஆகியவை ஆட்சியர் சுப்ரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நடந்து முடிந்து கடந்த மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகள் நடந்து முடிந்தன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் கள்ளக்குறிச்சி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், செஞ்சி தாலுகா அலுவலகம் மற்றும் மயிலம் பிடிஓ அலுவலகம் ஆகிய இடங்களில் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படாமல் இருப்பில் வைக்கப்பட்டிருந்த 1143 பேலட் யூனிட், 906 கண்ட்ரோல் யூனிட், 861 யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் இயந்திரம், குறைபாடுள்ள 48 பேலட் யூனிட், 55 கண்ட்ரோல் யூனிட், 367 விவிபேட் இயந்திரங்கள் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.  குறைபாடுள்ள இயந்திரங்கள் மட்டும் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. திமுக சக்கரை, காங்கிரஸ் ரமேஷ், அதிமுக பாஸ்கரன், பாஜ சுகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் சீனுவாசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.

Related Stories: