கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

மரக்காணம், ஜூலை 12: மரக்காணம் பேரூராட்சியின் கிழக்கு பகுதியில் உள்ளது புளியங்கால் கால்வாய். இந்த கால்வாய் அனுமந்தை ஊராட்சியில் இருந்து மரக்காணம் நாரவாக்கம் வரையில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது.

இந்த இடைப்பட்ட பகுதியில் 10 ஏரிகள், 15க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த நீர் நிலை ஆதாரத்தை நம்பி இங்கு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். ஆனால், 30 மீட்டர் அகலம், 10 அடி ஆழத்தில் இருந்த இக்கால்வாயை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது கால்வாய் சிறு வாய்க்கால் போல் காணப்படுகிறது. அதிலும் பல இடங்களில் கால்வாய் இருந்த சுவடு கூட இல்லை. இதனால் பருவ மழை காலத்தில் பெய்யும் மழை நீரானது ஏரி, குளங்களுக்கு செல்லாமல் வீணாக பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சென்று கலக்கிறது. இதுபோல் மழை நீரானது கடலில் கலப்பதால் ஆண்டு முழுக்க நீர் நிலைகள் வறண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், இந்த கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக 7 ஆண்டுகளுக்குமுன் அமைச்சராக இருந்த சண்முகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று கால்வாயை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மரக்காணம் புளியங்கால் கால்வாயை முதல் கட்டமாக ரூ.75 லட்சம் மதிப்பில் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அவர் அறிவித்து பல ஆண்டுகள் முடிந்து மீண்டும் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் இதுவரையில் இக்கால்வாயை ஆழப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குறை கூறுகின்றனர். எனவே, இக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை ஆழப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: