பிரதமர் நிதியுதவி திட்டம் விடுபட்ட விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்,  ஜூன் 26: விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப்ரவரி 24ம்  தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஹெக்டேர் விளைநிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6  ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம்  3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.  இதன்தொடர்ச்சியாக, இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் சிறு,  குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  எனவே உயர்பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட  விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும்  இத்திட்டத்தில் பயனடையும் வகையில் திட்டம் திருத்தியமடைக்கப்பட்டுள்ளது.  எனவே தகுதியான அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக  அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்து  பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

திண்டிவனம்:   திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் ரகோத்தமன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மண்டல துணைவட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள்,   கிராம நிர்வாக அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   சிறுகுறு விவசாயிகளுக்கு கடந்த 15 நாட்களாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தகுதியான பெருவிவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆலோசனை கூட்டத்தில் துணைவட்டாட்சியர்கள் ஆனந்தசேனன், ரங்கநாதன்,   மண்டல துணை வட்டாட்சியர்கள் கிருஷ்ணதாஸ், வேலு,   தேர்தல் துணைவட்டாட்சியர் ஜோதிபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

Related Stories: