சிவகிரியில் யோகா சாதனை நிகழ்ச்சி மாணவனுக்கு தொழிலதிபர் பாராட்டு

சிவகிரி, ஜூன் 26: சர்வதேச யோகா தினத்தையொட்டி சிவகிரி பிரணா யோகா பயிற்சி பள்ளி சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. பணிநிறைவு பெற்ற கூடுதல் தலைமை மின்பொறியாளர் பாஸ்கரவேலு தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் பொன் முத்தையாபாண்டியன், நகர செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சமூக செயற்பாட்டாளர் வீரபுத்திரன், முன்னாள் ராணுவ வீரர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரணா யோகா பள்ளி நிறுவனர் அருண்குமார் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு இந்திய இயக்குநர் அரவிந்த், தமிழக இயக்குநர் ஜெயக்குமார் ஆகியோர் ஜூடிகேட்டராக (நடுவர்) கலந்துகொண்டனர். யோகா பள்ளி மாணவன் மருதுபாண்டியன் (12), 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட ஆணிப்படுக்கையில் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை நிகழ்த்தினார்.

இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன், உலக சாதனை நிகழ்த்திய மருதுபாண்டியன் மற்றும் யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள அருண்பாண்டி, ஹரீஸ் தீபக், அஜய் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: யோகாவும், இந்திய மருத்துவமும் பின்னிப்பிணைந்தவை. உடல், மனம், ஆத்மா மூன்றையும் ஒருமுகப்படுத்துவது யோகா. எந்த ஒரு மதத்திற்கோ, சமுதாயத்திற்கோ, தனிநபர்களுக்கோ யோகா சொந்தமானதல்ல. ஒட்டுமொத்த உலக மக்களுக்கான கலை யோகா. எனவே அறிவியலோடு தொடர்புடைய இந்த கலையை அவரவர் உடலுக்கேற்ற வகையில் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலோடு தினமும் செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் பிரணா யோகா பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மருதுபாண்டியன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் சக்திவேல், முத்தரசன், ரவீந்திரன், முத்துலட்சுமி, வெள்ளத்தாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரவீந்திரநாத் பாரதி தொகுத்து வழங்கினார்.

Related Stories: