3 மாதமாக குடிநீர் ‘கட்’ பழநி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பழநி, ஜூன் 21: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி பழநி யூனியன் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.பழநி ஊராட்சி ஒன்றியம் பெரியம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்டது சின்னகாந்திபுரம் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. மேலும் 2 ஆண்டுகளாக போர்வெல்லும் இயங்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுபோல் சின்னக்காந்திபுரம் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிப்பொறுப்பாளர் அரசியல் பாரபட்சம் பார்த்து வேலை வழங்குவதாக புகார் எழுந்து வந்தது. இதனால் ஏழை மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.இந்நிலையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பழுதடைந்த போர்வெல்லை சரிசெய்ய வேண்டும். பணி வழங்குவதில் அரசியல் பாரபட்சம் பார்க்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிப்பொறுப்பாளரை மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி இப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் சார்பாக திமுக ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன், ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.இதுகுறித்து ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,பிரச்னைக்குரிய 100 நாள் வேலை திட்ட பணிப்பொறுப்பாளரை மாற்றம் செய்வதாகவும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். தீர்வு கிடைக்காவிட்டால் 24ம் தேதி அறவழிப் போராட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூலை 1ம் தேதி பொதுமக்களை ஒன்று திரட்டி நெய்க்காரப்பட்டியில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: