×

நகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் அழித்தல் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, ஜூன் 19: கிருஷ்ணகிரி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுப் புழுக்கள் அழிக்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.  கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுப் புழுக்கள் அழித்தல் பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. இதனையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் இப்பணிகள் துவங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுப் புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இதில் டெங்கு தடுப்பு மருந்து அபேட் மருந்து, முதிர் கொசுக்களை ஒழிக்கும் பைரித்திரம் புகை மருந்து, புகை மருந்தை தெளிக்க நகராட்சி சார்பில் 56 பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

மேலும், நகராட்சிக்குட்பட்ட 23 பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு 60 நாட்கள் இடைவெளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், பழையபேட்டை பஸ் நிலையம், 5 ரோடு ரவுண்டானா பகுதி, நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும். தொடர்ந்து, வீடு, வீடாகச் சென்று பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் சேகரிப்பு தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புகை மருந்து தெளிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்த கூடிய நீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது மாதக்கணக்கில் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி உள்ளதாகவும், அதனால் கொசுக்கள் பெருகிவிட்டதாகவும் அப்பகுதி பெண்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் நகராட்சி சார்பாக சிறிய தொட்டி வைத்து தானியங்கி மின்மோட்டார் மூலம் கழிவுநீரை வெளியேற்ற திட்டம் தயாரிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர். பிரியாராஜ், நகராட்சி ஆணையாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் மாரியப்பன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர். தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே பெரியபூதுக்கோட்டை கிராமத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு, சிக்கன் குனியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் உத்தரவின்படி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ் அறிவுரைப்படி, கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மருத்துவர் ஞானவேல் தலைமையில் பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் டெங்கு, சிக்கன்குனியா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நோய் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமில், மாவட்ட பூச்சியல் வல்லுனர் முத்துமாரியப்பன், வட்டார மேற்பார்வையாளர் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளர்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன், சிவகுருநாதன், விஜய் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : municipality area ,
× RELATED ஆத்தூர் நகராட்சி பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை