ரயில் நிலையத்தில் அறிவிப்பு குளறுபடியால் வள்ளியூரில் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

ராதாபுரம், ஜூன் 11:  வள்ளியூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு குளறுபடியால், பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்தை ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும், இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன.  இதுெதாடர்பாக வள்ளியூர் வியாபாரிகள் சங்க செயலாளர் சுரேஷ்சில்வர்ராஜ்குமார், மத்திய ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளியூர் பகுதி ரயில் பயணிகளின் தினசரி தேவைக்காக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் விட வேண்டும். வள்ளியூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் வள்ளியூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், ரயில் தாமதமாகும்போது காத்திருக்கின்றனர். ஆனால் இங்குள்ள பயணிகள் தங்கும் அறைகள், நீண்டகாலமாக பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனை பராமரித்து பயணிகள் தங்குவதற்கு திறந்து விட வேண்டும். ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பிராத்தில் மேற்கூரை இல்லை. இதனால் பயணிகள் பிளாட்பாரங்களில் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகின்றனர். எனவே பிளாட்பாரங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

போதுமான மின்விளக்கு, கழிவறை, குடிநீர் வசதிகளை விரைந்து நவீன வசதியுடன் செய்து தர வேண்டும். ரயில் நிலைய அறிவிப்பாளர் அடிக்கடி பிளாட்பாரங்களில் ரயில்கள் நிற்கும் அறிவிப்புகளை மாற்றி தெரிவிப்பதால் பயணிகள் ரயில் தண்டவாளங்களை அவசரமாக அபாயகரமாக கடக்க முயல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை சரியாக அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தவரை அனைத்து ரயில்களும் முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: