காய்கள் பறிக்கும் பணி தீவிரம் கர்நாடகா செல்லும் கன்னிவாடி மிளகாய்

செம்பட்டி. மே 30: கன்னிவாடி அருகே நீலமலைக்கோட்டையில் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு குண்டுரக பச்சை மிளகாய்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.30 வரை விலைபோவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில், சிறுமலை அடிவார பகுதி கிராமங்களான செட்டியபட்டி, காந்திகிராமம், அம்பாத்துரை, வெள்ளோடு, காமலாபுரம், கொடைரோடு மற்றும் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரப்பகுதி கிராமங்களான கன்னிவாடி, பண்ணைப்பட்டி, நீலமலைக்கோட்டை, ராமபுரம், தருமத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் குண்டுரக பச்சைமிளகாய்களை பயிரிட்டுள்ளனர்.

குறிப்பாக, நீலமலைக்கோட்டை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பச்சை மிளகாய்களை விவசாயிகள் அறுவடை செய்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது அறுவடை செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நீலமலைக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘100 கிராம் பச்சைமிளகாய் விதையை ரூ.700க்கு விலைகொடுத்து வாங்கி நாற்று விட்டோம்.

45 நாட்கள் கழித்து அதை நாங்கள் நிலத்தில் நடவு செய்தோம். 90 நாட்கள் கழித்து செடியில் பச்சை மிளகாய்களை பறித்துவருகிறோம். ரங்கா எனப்படும் ஒட்டுரக விதைகளை வாங்கி இப்பகுதி விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். சராசரியாக ஒரு ஏக்கருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை 15 முதல் 20 மூடை பச்சைமிளகாய்களை பறித்து வருகிறோம். முதல்ரக பச்சைமிளகாய் ரூ.30 முதல் 40 வரையிலும், இரண்டாம் ரக மிளகாய் ரூ.20 வரை விலைபோகிறது.

இப்பகுதியில் பறிக்கப்படும் மிளகாய் நல்ல பச்சை நிறத்துடனும், அதிக காரமுடனும் இருப்பதால் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பச்சைமிளகாய் செடிகளில் தொடர்ந்து 6 மாதம் வரை காய்களை பறிக்கலாம் வாரத்திற்கு இரண்டு முறை தண்ணீர் விட்டால் போதும். காய்கள் செடிகளில் காய்த்துக் குலுங்கும்’’ என்றனர்.

Related Stories: