திசையன்விளையில் மேற்கூரையை உடைத்து துணிகரம் அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை

திசையன்விளை, மே 30: திசையன்விளையில் அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை போனது. இது  வடமாநில கொள்ளையர்கள் கை வரிசையா? என்ற கோணத்தில் போலீசார்  விசாரிக்கின்றனர். திசையன்விளை மெயின்பஜாரில் மடத்து அச்சம்பாட்டைச்  சேர்ந்த பிலிப்போஸ் டேனியல் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர்  நகர காங்., முன்னாள் தலைவராகவும், திசையன்விளை பேரூராட்சியின் முன்னாள்  துணைத்தலைவராகவும் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில்  வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 7 மணி  அளவில் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் மேற்கூரை தகர ஷீட்  கழற்றப்பட்டு கிடந்தது பதறினார். கடையின் உள்ளே சென்று பணப் பெட்டியை  பார்த்த போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். அதாவது  கடையின் கூரையை தகர ஷீட் போட்டு இரும்பு ‘ஸ்கூருக்களால்’ டைட் செய்து  வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் பொறுமையாக அமர்ந்து தகர ஷீ்ட்டை அகற்றி  கடைக்குள் குதித்துள்ளனர். கடைக்கு அருகே பெரிய வேப்ப மரம் ஒன்று உள்ளது.  அதன் கிளைகளில் அமர்ந்து தகர ஷீ்ட்டின் ‘ஸ்கூருக்களை’ கழற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் இந்த பலசரக்கு கடையை அடுத்துள்ள செல்வகுமார் என்பவரது கடையிலும் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து  பிலிப்போஸ் டேனியல் மற்றும் செல்வகுமார் திசையன்விளை போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார்  வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். சமீப காலமாக வடமாநில  வாலிபர்கள் திசையன்விளை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போர்வை விற்பது,  சீனப் பொருட்கள் விற்பது என உலா வருகின்றனர். அவர்களில் யாரேனும் இதில்  ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: