உளுந்தூர்பேட்டை உழவர் சந்தை அருகே பாதாள சாக்கடை தொட்டியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

உளுந்தூர்பேட்டை, மே 29:

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒரு கட்டமாக சாலைகளின் ஓரம் மற்றும் தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கான பைப்லைன்கள் அமைப்பதற்காக பெரிய அளவிலான பள்ளங்கள் போடப்பட்டு பைப் லைன்கள் இணைப்பு பகுதியில் தொட்டிகள் அமைக்கப்பட்டு வந்தது. இந்த தொட்டிகள் உள்ள இடத்தில் போடப்பட்டுள்ள மேல் மூடிகள் சில இடங்களில் சாலையை விட உயரமாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அந்த வழியாக செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக சேலம் ரோடு உழவர் சந்தை எதிரில் உள்ள தொட்டியின் மேல் பகுதியில் போடப்பட்டுள்ள மூடி சாலையைவிட அதிக உயரமாக உள்ளதால் இரவு மற்றும் பகல் நேரத்தில் இதனை கவனிக்காமல் வரும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அதன் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பாதாள சாக்கடை திட்ட பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க பிரதிபலிப்பான்கள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: