×

கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம், மே 23:  ராமநாதபுரத்தில் உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட வன உயிரினக்காப்பாளர் அசோக்குமார் கூறுகையில், ‘‘ மன்னார் வளைகுடா கடல் பகுதி ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 10,500 சதுர கீ.மீ. தூரம் உள்ளது. சின்ன உயிரினங்கள் முதல் அரிய வகை உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இக்கடற்பகுதியில் 4,223 கடல் சார் உயிரினங்கள் உள்ளன. இதில் 117 அரியவகை பவளப்பாறைகளும், 1,600 வகை மீன் இனங்களும், கடல் பசுக்களும் உள்ளன.

மேலும் பச்சை ஆமை, பேராமை, அங்காமை உள்ளிட்ட ஐந்து வகை கடல் ஆமைகளும்  கடல் பகுதியில் காணப்படுகின்றன. இதில் அங்காமை வகையை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் மாரியூர், எம்.ஆர்.சத்திரம் என இரண்டு இடங்களில் முட்டைகளை பாதுகாத்து பொறிக்க வைக்கும் மையங்கள் உள்ளன. கடல் பசுக்கள் உணவான கடல் புற்களை வளர்க்கும் திட்டமும் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது.

ராமநாதபுரம் கடல் பகுதியில் 39 இன கடல் அட்டைகள் உள்ளன. கடல் அட்டைகளால் கடல் ஊட்டம் மேம்பட்டு கடல் புற்களும், மீன்களும் அதிகரிக்கும். இதனால் கடல் வளம் பெருகும். மீன்பிடி தொழில் வளர்ச்சியடையும். சமீபகாலமாக கடல் அட்டைகள் அதிகம் பிடிக்கப்பட்டு வருகின்றன. கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வன உயிரின காப்பகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உயிர்ப்பன்மையை பாதுகாக்கும் வகையிலே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கடல் உயிப்பன்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது அனைத்து வகைகடல் வாழ் உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கிறது’’ என்றார்.
ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமாரி வரையிலான கடல் பகுதியில் மண்டபம் பகுதி சின்னபாலம் கிராமத்தில் மாவட்ட வன உயிரின காப்பாகம் சார்பில் நேற்று மாலை உலக பல்லுயிர் பெருக்க தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சூழல் மேம்பாட்டு அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் தாங்கினார். அப்பகுதியை சேர்ந்த சூழல் மேம்பாட்டு குழுவினர், மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை