பள்ளி மாணவர்களுக்கு வழங்க 2.23 லட்சம் புத்தகம் தயார்

திருப்பூர், மே 22: திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 2.23 லட்சம் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கல்வியாண்டு துவங்கவுள்ளதால், அதற்கான பணிகளை மாவட்ட கல்வித்துறை வேகப்படுத்தி உள்ளது. 1 முதல் 5 வரையுள்ள துவக்க பள்ளி குழந்தைகள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க முதல் கட்டமாக, 2.23 லட்சம் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன், 40 பக்கம், 80 மற்றும் 190 பக்கம் கொண்ட கட்டுரை நோட்டு, ஓவியம், கிராப்ட் நோட்டு, மொழிப்பயிற்சி புத்தகம் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து ஆறு லாரிகள் மூலம் இவை அனுப்பப்பட்டது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் புத்தகங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் ஒவ்வொரு தாலுகா வாரியாக, பள்ளிகளை பிரித்து, அவற்றுக்கான புத்தகங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

அவர்கள் பள்ளி திறக்கப்படும் நாளான்று (ஜூன் 3) அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குவர். நடப்பு கல்வியாண்டில் 7, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கூடுதலாக புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: