ஈஸ்வரன் கோயில் தேரோட்டம்

திருப்பூர்,மே19: திருப்பூர் ஈஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூரில் விஸ்வேஸ்வர சுவாமி கோயில் மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள், சாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. விசாலாட்சி அம்மை உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி திருவீதி உலாவும், பூமிநீளாதேவித் தாயார், கனகவல்லித் தாயார் உடனமர் வீரரகாவப் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது. அதிகார நந்தி, சேஷ வாகனம், கற்பகவிருட்சத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஈஸ்வரன் கோயில் தேரோட்டம் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையினர், கட்டளைதாரர்கள், ஊர் பிரமுகர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஈஸ்வரன் கோயில் வீதி, அரிசிக்கடை வீதி, காமராஜர் வீதி, பூ மார்க்கெட் பகுதி வழியாக தேர் பவனி வந்து, பெருமாள் கோயில் மைதானத்தில் நிலையை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, இன்று வீரராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

Related Stories: