கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

கடையநல்லூர், மே 17: கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷம் விண்ணை முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காலையில் துவங்கியது. விழாவை முன்னிட்டு அன்று காலையில் அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புகட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு சமுதாயத்தினரால் பால்குடம் ஊர்வலம், பூந்தட்டு, மாக்காப்பு அலங்கார தீபாராதனைகள், இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.

Advertising
Advertising

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலையில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலில் துவங்கி பஜார், மெயின்ரோடு வழியாக மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது. இரவில் ஊஞ்சல் தீபாராதனை, அம்பாள் தேர் தடம் பார்த்தல் நடந்தது. இன்று 17ம் தேதி காலையில் பால்குடம், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருணாசலம், செயல் அலுவலர் முருகன் மற்றும் அனைத்து சமுதாய கட்டளைதாரர்கள், விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: