இடைப்பாடி, மேட்டூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 23 பஸ்களுக்கு தகுதிச்சான்று ரத்து

மேட்டூர், மே 17:  மேட்டூர், இடைப்பாடியில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வருடாந்திர ஆய்வு செய்தனர். இதில் 23 பஸ்களுக்கு தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேட்டூரில் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தகுதி குறித்து, முதல்கட்ட ஆய்வு நேற்று நடைபெற்றது. மேட்டூர் ஆர்டிஓ லலிதா முன்னிலையில், மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முரளி ஆகியோர் வாகனங்களை சோதனையிட்டனர்.

Advertising
Advertising

வாகனங்களின் பிளாட்பாரத்தின் உறுதித்தன்மை, படிக்கட்டுகள், முதலுதவி பெட்டிகள், அவசர கால கதவுகளின் இயக்கம் மற்றும் உறுதித்தன்மை உட்பட 16 வகையான பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தனர். முதல்கட்ட ஆய்வில், மேட்டூரில் உள்ள தனியார் பள்ளிகளின் 83 பஸ்கள் பங்கேற்றன. இதில் 5 பஸ்கள் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்ததால் அவற்றின் தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டன.

இடைப்பாடி: இடைப்பாடி மறறும் சங்ககிரியில் உள்ள தனியார் பள்ளிகளில், 267 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இடைப்பாடி அடுத்த மொரசப்பட்டி அமலா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், 76 தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. சங்ககிரி ஆர்டிஓ அமிர்தலிங்கம்,  வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இடைப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 90 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 18 பஸ்கள் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்ததால், அவற்றின் தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டன. அவற்றை சரி செய்து, அடுத்த ஆய்வின் போது காண்பித்து சான்று பெறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories: