₹33 லட்சம் மதிப்பில் அதிநவீன நுரையீரல், குடல் உள்நோக்கு கருவி

விக்கிரவாண்டி, மே 15:   விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் புறநோயாளியாக சுமார் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும் திறக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதால் அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  நுரையீரல் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் மாதத்திற்கு சுமார் 6 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இவர்கள் பயன்பெறும் விதமாக நுரையீரல் புற்று நோய் மற்றும் காசநோய், இரப்பை, குடல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் கருவி அமைக்கப்பட்டு நேற்று மருத்துவமனை பிரிவில் இதன் திறப்பு விழா நடந்தது. கல்லூரி டீன் சங்கரநாராயணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணை இயக்குநர்(காசநோய்) சுதாகர், மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைய மருத்துவ அலுவலர் கதிர் வரவேற்றார்.

Advertising
Advertising

இதுகுறித்து டீன் சங்கரநாராயணன் கூறுகையில், ரூ.33 லட்சத்தில் புதியதாக நுரையீரல் மற்றும் குடல் உள்நோக்கு கருவி அமைக்கப்பட்டு பொதுமக்களின் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு மேல் இருமல், உடல் எடைகுறைதல், பசியின்மை, தீராத வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்து இக்கருவி மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறலாம் என கூறினார். துணை நிலைய மருத்துவ அலுவலர் ராஜீவ்குமார், குடல் மற்றும் ஜீரண சிகிச்சை துணை பேராசிரியர் ராஜமகேந்திரன், நுரையீரல் பிரிவு டாக்டர்கள் ராம்குமார், இளையராஜா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: