அரசு மருத்துவக்கல்லூரியில் ‘செவிலியர்கள் தினம்’ புதிய சீருடைக்கு மாறிய நர்ஸ்கள்

நெல்லை, மே 14:  செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நர்ஸ்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். உலக நர்ஸ்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. காலையில் நர்ஸ்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். இதனை டீன் டாக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நர்ஸ்கள் சங்க மாநில துணை தலைவர்கள் மணிகண்டன், கீதாகிருஷ்ணன், கிளை சங்க செயலாளர் நிகிலா ராணி, தலைவர் பாலு, செவிலிய கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

மருத்துவமனை வளாகம் முழுவதும் பேரணி நடந்தது. தொடர்ந்து சிறப்பு கருத்தரங்கு டீன் டாக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், நர்ஸ்கள் பணி மருத்துவத்துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீரிய மருத்துவ உதவி பணியாலும், கனிவான பேச்சாலும் நோயாளிகளுக்கு உற்சாகம் அளிக்கும் தன்மை வாய்ந்தவர்கள்.

இவர்களை கவுரவிப்பதற்காக ஆண்டுதோறும் செவிலியர்கள் தின விழா கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் உதவுவது என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து செயல்படுங்கள், என்றார். தொடர்ந்து ஓய்வுபெற்ற செவிலியர் கண்காணிப்பாளர்கள் மற்றும் புதிய செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நர்ஸ்களின் கிரேடு நிலைக்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் புதிய சீருடைகளின் மாதிரிகளை கடந்தாண்டு அரசு வெளியிட்டது.

இவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டு இருந்தாலும், பழைய வெள்ளைநிற சீருடையிலேயே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நர்சிங் சூப்பிரண்டுகள் 20 பேரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பிங்க் நிற சேலை மற்றும் வெள்ளை நிற முழுக்கையுடன் கூடிய மேல் சட்டைக்கு நேற்று மாறினர். பிற நர்ஸ்கள் அடுத்த சில நாட்களில் இருந்து அவர்களுக்கு உரிய புதிய சீருடையுடன் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: