தூய்மை திட்டம் கேள்விக்குறி புதர் மண்டிக்கிடக்கும் ஆட்சியர் அலுவலக வளாகம்

கடலூர், மே 9: கடலூர் குண்டு சாலை பகுதியில் உள்ள புதிய ஆட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி கிடப்பதால் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் படை எடுத்து வருகிறது. அலுவலகத்துக்குள் நுழைந்த பாம்பை கண்டு ஓட்டம் பிடித்த ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் குண்டு சாலை பெண்ணையாறு கரையோரப் பகுதியில் புதிய ஆட்சியர் அலுவலகம் உள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலக கட்டிட பகுதிக்கு அருகில் உள்ள காலி நிலத்தில் புதர்மண்டி தூய்மை இல்லாமல் கிடக்கிறது. பசுமை திட்டத்தின் கீழ் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூங்காக்கள் அமைத்து நீரூற்றுகள் ஏற்படுத்தி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க பல்வேறு சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுபோன்று முந்தைய ஆட்சியர்கள் சிலர் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் ஆட்சியர் மாற்றத்தின் போது அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்படுகிறது.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மாவட்டத்தில் பசுமை பணிக்காக தங்களது பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கும் நிலையில் ஆட்சியர் வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க ஏற்பாடு செய்யலாம். அதை விடுத்து பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பது பாம்பு, விஷப்பூச்சிகள் இருப்பிடமாக மாறிவிட்டது.தற்போது கோடைகாலம் என்பதால் பாம்பு உள்ளிட்டவைகள் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட தகவு இயல் அலுவலர் அறையை அரசு அலுவலர்கள் திறந்தனர். அப்போது, 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பு, பாம்பு என அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பானது.பின்னர் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்  சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட போராட்டத்துக்கு பின் பாம்பை பிடித்தார். பாம்பு பிடிபட்டாலும் புதர் மண்டிக்கிடக்கும் ஆட்சியர் அலுவலகத்தை தூய்மை செய்து பசுமை திட்டங்களை மேம்படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள்கருத்து தெரிவித்தனர்.

Related Stories: