மாவட்டத்தில் உணவு பொருட்களை பேப்பரில் சுற்றி வழங்கக்கூடாது

கிருஷ்ணகிரி, மே.8:  கிருஷ்ணகிரி மாவட்டத்  கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தினசரி மக்கள் கூடும் உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட செய்தித்தாள் மற்றும் பிளாஸ்டிக்கில் பரிமாறப்படுவது மற்றும் பொட்டலமிடுவது உணவுப்பாதுகாப்பு ஆணையகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. பெட்டிக் கடைகள், டீ கடைகள், உணவு விடுதிகளில் வடை, பஜ்ஜி, போண்டா, இறைச்சி, மீன்கள் போன்ற உணவை செய்தித்தாள்களில் வைத்து எண்ணெய் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும்.

செய்தித்தாள்களும், கார்ட் போர்டு அட்டைகளும் மறுசுழற்சியிலான பெறப்படுபவை. ஆகவே அவற்றில் உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக் கூடிய தாலேட் போன்ற வேதிப்பொருட்களும், கனிம எண்ணெய்களும் காணப்படுவதால் அஜீரண கோளாரை உருவாக்குவதோடு, கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பொருட்களை உணவுடன் பயன்படுத்துவதால், வயதானவர்கள், குழந்தைகள், வளரின பருவத்தினர் நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, கேன்சர் போன்ற நோய்கள் வர காரணமாகின்றன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையகரத்தால் செய்தித்தாள்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றால் உணவை பேக்கிங் செய்வதோ, செய்தித்தாள்களில் எண்ணெய் பிழியவோ, வைத்து உண்ண பயன்படுத்தவோ நாடு முழுவதும் தடை உத்தரவு போடப்படடுள்ளது.

எனவே, டீக்கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், எண்ணெய் பலகாரக்கடைகள், அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில், செய்தித்தாள் மற்றும் அது தொடர்பான பொருட்களை கொண்டு பேக்கிங் செய்யவோ, உண்பதற்கோ வழங்கவே கூடாது.  அது குறித்தான புகார்கள் ஏதும் இருப்பின், கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: