கோடை சீசன் எதிரொலி பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரிப்பு

ஊட்டி, மே. 7:கோடை சீசன் நெருங்கிய நிலையில் சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை தணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்த சீசன் சமயத்தை பயன்படுத்தி ஏராளமான பிச்சைகாரர்களும் ஊட்டியை முற்றுகையிடுகின்றனர். இவர்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நடைபாதைகள், சாலையோரங்களில் நின்று கொண்டு சுற்றுலா பயணிகள் கால் மற்றும் கைகளை பிடித்துக் கொண்டு பிச்சை கேட்டு தொல்லை செய்கின்றனர்.

குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கால்களை பிடித்து கொண்டு சிறிய குழந்தைகள் பணம் தரும் வரை விடுவதில்லை. அதுமட்டுமின்றி நடைபாதைகளை ஆக்கிரமித்துக் கொண்டு சிலர் குடிபோதையில் தகாத வார்தைகளையும் பேசி வருகின்றனர்.

  இதனால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு சீசன் போது ஊட்டியில் சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்த பல பிச்சை காரர்களை பிடித்து முகாம்களுக்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் இம்முறை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அனைத்து சாலைகள் மற்றும் நடைபாதைகளில் நாளுக்கு நாள் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, நகராட்சி நிர்வாம் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஊட்டியில் உலா வரும் பிச்சைகாரர்களை கடந்த ஆண்டை போலவே பிடித்து முகாம்களில் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: