ரயில்வே நுழைவுபாலத்தில் தேங்கும் நீரால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு, ஏப். 26: ஈரோடு அருகே வெள்ளோடு-புங்கம்பாடி ரயில்வே நுழைவுபாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இருந்து புங்கம்பாடி செல்லும் வழியில் ரயில்வே நுழைவுபாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக புங்கம்பாடி, தெற்கு மேட்டுப்பாளையம், பாரவலசு, நத்தக்காட்டுபாளையம் ஆகிய பகுதிகளுக்கும், மற்றொரு பகுதியான வி.மேட்டு–்ப்பாளையம், வெள்ளோடு, தச்சன்கரை, செல்லப்பம்பாளையம், செம்மாண்டம்பாளையம், தலையகாட்டூர் ஆகிய பகுதிகளுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெருந்துறை ரோட்டில் உள்ள மேட்டுக்கடையில் இருந்து சென்னிமலை ரோட்டிற்கு வர புங்கம்பாடி ரயில்வே நுழைவுபாலம் வழியாக 3 கி.மீ. தூரத்திற்குள் வந்து விடலாம்.

இல்லையென்றால், ஈரோடு வந்து பிறகு சென்னிமலை ரோட்டிற்கு சென்று சுற்றி வரவேண்டும். ரயில்வே நுழைவுபாலம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்வதால் இதில் இருந்து வரும் கசிவுநீர் எப்போதும் நுழைவுபாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், இந்த ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ரயில்வே நுழைவுபாலத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், ரோட்டை சீரமைக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: