அரசு பள்ளிகளில் எல்கேஜி அட்மிஷன் சீருடை, புத்தகங்களுக்கு கையேந்தும் அவலம்

விழுப்புரம்,  ஏப். 25: தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி அட்மிஷன் துவங்கப்பட்டுள்ள நிலையில்  மாணவர்களுக்கான சீருடை, பாடப்புத்தகம், ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட  அனைத்திற்கும் அரசு நிதி ஒதுக்கவில்லை . எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் பிடிக்குமாறு கூறியதால் சிஇஓக்கள் அந்த வேலையில்  ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில்  இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாகவே அறிவித்திருந்தார்.  அதன்படி வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள்,  மாணவர்கள் சேர்க்கை அந்தந்த மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. தற்போதைய  காலகட்டத்தில் ஆரம்ப கல்வியே எல்கேஜியாக இருக்கும் பட்சத்தில் தனியார்  பள்ளிகளில் பல ஆயிரம் கட்டணம் இதற்கு வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏழை,  எளியவர்கள் தங்களது பிள்ளைகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்கமுடியாத சூழ்நிலை  உள்ளது.

இதனை போக்கத்தான் தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி  வகுப்புகளை தொடங்க உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில்  மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. விழுப்புரம்  மாவட்டத்தில், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு  வருகிறது. வகுப்புகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைக்கு 35 பேர் வீதம் எல்கேஜிக்கு 2  வகுப்புகள், யுகேஜிக்கு 2 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்பறைக்கு ஒரு  ஆசிரியரும், ஒரு உதவியாளரும் பணியில் ஈடுபட உள்ளனர். ஆனால் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு  அட்மிஷன் தொடங்கிய நிலையில் இதுவரை பாடத்திட்டம், ஆசிரியர்கள் பணிநியமனம்  செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு  மழலையர் பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கல்வித்தகுதி  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நேற்று முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக்  கல்வி அலுவலர் முனுசாமி இதனை துவக்கிவைத்து, முதல் மாணவர் சேர்க்கையும்  நடந்தது. இந்நிலையில் விண்ணப்பங்கள் விநியோகம், அட்மிஷன் துவங்கப்பட்ட  நிலையில் சீருடை, பாடப்புத்தகங்களுக்கு அரசு நிதிஒதுக்கீடு  செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. அனைத்துக்கும் ஸ்பான்சர் பிடிக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  மாதச்சம்பளம் என அனைத்திற்கும் ஸ்பான்சர் பிடிக்கச்சொல்லியுள்ளதாக தெரிகிறது. இது  பெற்றோர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பெயரளவில் வகுப்புகளை துவக்கிவிட்டு எல்லாவற்றுக்கும் மற்றவர்களிடம்  அதிகாரிகளை ைகயேந்த வைத்துவிட்டார்களே என்று கல்வித்துறை அதிகாரிகள் புலம்பி  வருகின்றனர். இது குறித்து சிஇஓ முனுசாமியிடம் கேட்டபோது, 70 மாணவர்கள்  சேர்ந்தவுடன் சேர்க்கை முடிவடைந்துவிடும். முழுவதுமாக இலவசம் தான். ஒரு  பைசா கூட வசூலிக்கப்படமாட்டாது. சீருடை, பாடப்புத்தகங்கள் விநியோகம்  செய்யப்படும். பாடப்பிரிவுகள் இனிமேல்தான் முடிவு செய்யப்படும். அரசு  இதற்காக நிதிஒதுக்கீடு செய்யவில்லை. தனியார் நிறுவனங்களில் ஸ்பான்சர்  பிடித்துதான் வகுப்புகளை நடத்த உள்ளோம் என்று வெளிப்படையாகவே கூறினார்.

Related Stories: