மாவட்டத்தில் பரவலாக கன மழை

கிருஷ்ணகிரி, ஏப்.24:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களை கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 105 டிகிரி வரையில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பகல் நேரத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகள்  யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இரவில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் விருப்பாச்சி நகர் முருகன் கோயில் அருகில் ஆலமரம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுபோல் அரசு பள்ளியின் வளாகத்தில் மழைநீர் தேங்கி குளம்போல மாறியது. ஒட்டு மொத்தமாக இந்த மழையால் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்(மி.மீ.,) : ஓசூரில் அதிகபட்சமாக 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி 44.20, ஊத்தங்கரை 33.20, பாரூர் 19.20, சூளகிரி 17, தேன்கனிக்கோட்டை 15, தளி 10, போச்சம்பள்ளி 8.20, நெடுங்கல் 4.20 என மொத்தம் 201 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.

போச்சம்பள்ளியில் தொடர் மழை இரவில் மின்சார தடையால் மக்கள் அவதி :   போச்சம்பள்ளி  சுற்றுவட்டார பகுதிகளில், கோடை தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரித்தது.  பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில்  போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 2 நாட்களுக்கு முன் இடியுடன்  கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்  மகிழ்ச்சியடைந்தனர்.  

முன்னதாக மழை பெய்யத் தொடங்கியதும்,  முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை துண்டித்தனர். இரவு முழுவதும் மின்சாரம்  விநியோகிக்கப்படவில்லை. இந்நிலையில்  போச்சம்பள்ளியில் நேற்று  முன்தினம் இரவும் மழை பெய்தது. வழக்கம் போல மின்சாரத்தை துண்டித்தனர். இரவு  முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால், மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை.  இதனால் மக்கள் விடிய விடிய பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததால், நேற்று காலை  மின்வாரி ஊழியர்கள், அவற்றை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளை முடித்தபின்  மின்சாரம் வழங்கினர்.

Related Stories: