×

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

ராமநாதபுரம், ஏப்.24: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளின் வழியாக பெற்றுக்கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 7412 மாணவர்கள், 8262 மாணவிகள் என மொத்தம் 15474 பேர் தேர்வு எழுதினர். இதில் 6467 மாணவர்கள், 7815 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.30% ஆகும். தேர்வு எழுதியவர்கள் அனைவருக்கும் இன்னும் சில வாரங்களில் ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படிப்புக்கு செல்ல வசதியாக அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது.

விடைத்தாள்கள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க இன்று இறுதி நாளாகும். நகர் மற்றும் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பிப்பவாகள் நகல் அல்லது மறு மதிப்பெண் கூட்டல் என்பதை தெளிவாக குறிப்பிட படவேண்டும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்பவர்கள் அதே பாடத்திற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பின்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்2 தேர்வு எழுதி தோல்வியைத் தழுவிய மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். அந்த நேரத்தில் தேர்வுக்கான உரிய கட்டணத்தை ஆன்லைன் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை