சோழவந்தான் அருகே கால்வாய் கரையில் இருந்த மரங்கள் பட்டப்பகலில் வெட்டி கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சோழவந்தான், ஏப்.22: சோழவந்தான் அருகே கால்வாய் கரையில் இருந்த மரங்கள் மர்ம கும்பலால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சட்டியுள்ளனர். சோழவந்தான் அருகே தென்கரை கன்மாய் மூலம் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதற்கு சித்தாதிபுரம் அருகே வைகையாற்றிலிருந்து சுமார் 10 கி.மீ தூரம் நீர்வரத்து பாசனக் கால்வாய் உள்ளது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள     இதன் கரையிலும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளது. சில மரங்கள் பட்டுப்போய் விழுந்து அகற்றப்படாமல் கிடக்கிறது. முறைப்படி இவற்றை அகற்றி விற்பனை செய்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் அதிகாரிகள் அதைச் செய்வதே இல்லை.

இந்நிலையில் கண்ணுடையாள்புரம் அருகே புண்ணூர் அய்யன் கோவில் அருகே கால்வாயின் மேற்குக் கரையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தீக்குச்சி தயாரிக்க பயன்படும் பீநாத்தி எனும் பச்சை மரத்தை சில நாட்களுக்கு முன் ஒரு கும்பல் வெட்டி கடத்தி சென்று விட்டனர். இது குறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கால்வாய் கரையிலிருந்த தீக்குச்சி மரத்தை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி கடத்திச் சென்றுவிட்டனர். இது குறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் கூறியும் நடவடிக்கை இல்லை. மேலும் பல மரங்கள் பட்டுப்போய் கால்வாயின் அருகிலும், குறுக்கேயும் பயனற்றுக் கிடக்கிறது. மேலும்  இக்கால்வாய் தூர்வாரும் பணிக்கு பல லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இவை ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எனவே இதுகுறித்து முழுமையான நடவடிக்கை எடுக்க பொதுப்பபணித்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்’ என்றனர்.   

Related Stories: