ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்

சின்னசேலம், ஏப். 22: ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சின்னசேலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்சாகுளம் பகுதியில் சின்னசேலம்(வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். சுமார் 25 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பெரும்பாலும் ஏழை, எளிய மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவரும், வகுப்பறை கட்டிடமும் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்ப இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது மாணவர்கள் அச்சமின்றி அமர்ந்து படிக்க ஏதுவாக உள்ளது. ஆனால் இந்த பள்ளி கட்டிடம் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ளது. பள்ளி கட்டிடத்தின் ஒரு பக்கம் சாக்கடை கால்வாய் உள்ளது. பின்புறம் பாழடைந்த கிணறு உள்ளது. இது மாணவர்களின் பாதுகாப்புக்கு ஏற்றதாக இல்லை.

இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி இடைவேளை நேரங்களில் மாணவர்கள் வெளியே வந்து விளையாடும்போது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளனர்.

Related Stories: