தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம், ஏப். 22:  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-12(1) (சி)யின்படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கட்டாயக்கல்வி உரிமை சட்ட விதிகள் 2011 விதி  எண் 4(1)ன்படி எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் பள்ளி, வீட்டில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்குள் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ  நடைமுறைப்படுத்துதல் பணியை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்கீழ் விண்ணப்பத்தை பெற அந்தந்த பள்ளிகள் அல்லது அருகில் உள்ள வட்டார வளமையங்கள், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மே மாதம் 18ம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளி வாரியாக விண்ணப்பங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் முன்னிலையில், இடம் ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும், என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: