பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகள்

உளுந்தூர்பேட்டை, ஏப். 22:  பயிர்களை நாசம் செய்யும் மான்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் உள்ள இந்த காடுகளில் தைல மரங்கள் உட்பட பல்வேறு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், நரி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிக்கு அருகில் ஏ.குமாரமங்கலம், கணையார், பு.மலையனூர், எடைக்கல், திருப்பெயர்தக்கா, பாலி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மான்கள் இரவு நேரங்களில் கூட்டமாக இரைதேடி வந்து நெல், எள் உள்ளிட்ட பயிர்களை கடித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மான்களின் வருகையை கட்டுப்படுத்த விவசாயிகள் வயல்வெளிகளை சுற்றி துணி உள்ளிட்டவைகளை கட்டி வைத்து வந்தாலும், அவைகள் பயிரை தின்று நாசம் செய்து வருவதால் விவசாய பயிர்கள் கடும் பாதிப்பு அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், காடுகளை விட்டு மான்கள் தண்ணீர் மற்றும் இரைதேடி வருவதால் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், மான்கள் காப்புகாடுகளில் இருந்து வெளியேறாமல் இருக்க வயல்வெளி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கம்பி வேலி அமைத்து மான்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும், என இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் காடுகளில் இருந்து விவசாய நிலத்திற்கு வரும் மான்களை சமூக விரோதிகள் வேட்டையாடி கொன்று வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இந்த காப்பு காடுகள் உள்ளதால், சாலையை கடக்க மான்கள் முயலும் போதும் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. மனித உயிர்களை கொன்று தின்னும் புலி, முதலை உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு சரணாலயங்கள் அமைப்பது போல் மான்கள் அதிக அளவில் வசித்து வரும் எடைக்கல் காட்டில் உள்ள மான்களை பாதுகாக்க மான்கள் சரணாலயம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மான்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: