விவசாயி தற்கொலை டிராக்டர் கடனை தள்ளுபடி செய்த பைனான்ஸ் நிறுவனம்

விழுப்புரம், ஏப். 21: டிராக்டர் கடனை தள்ளுபடி செய்து விவசாயியின் பிள்ளைகள் படிப்புக்கு பிரபல பைனான்ஸ் நிறுவனம் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மழவராயனூரை சேர்ந்தவர் செல்வம்(57), விவசாயி. இவர் விழுப்புரத்தில் உள்ள பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் கடன் வாங்கி டிராக்டர் வைத்து தொழில் செய்துவந்தார். இதனை மகன் பாலாஜி என்பவர் பராமரிப்பு செய்து வயலில் உழுது வந்துள்ளார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக தவணை பாக்கியை சரிவர செலுத்த முடியவில்லை. இந்நிலையில் செல்வத்தின் மகன் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு 5 வயதில் மகளும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டிருந்தது. இந்நிலையில், இறந்துபோன பாலாஜியின் மனைவி தரணி தங்களின் குடும்பம் வறுமை சூழ்நிலையில் உள்ளதாகவும், டிராக்டர் மீதான கடன் பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவி செய்ய பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினார். அதனை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனம், டிராக்டர் வாங்கிய வாகன கடன் ரூ.7,10,000 தள்ளுபடி செய்தும், மகள், மகன் படிப்புக்காக அவர்கள் மீது ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை தரணி குடும்பத்தினரிடம் அந்நிறுவனத்தினர் வழங்கினர்.

Related Stories: